உலகிலுள்ள அனைத்து நாடுகளும் தற்போது வரை எதிர்நோக்கிக் கொண்டிருக்கக் கூடிய பாரிய பிரச்சினையாக இருப்பது Covid19 நோய்த்தொற்றுத் தாக்கமாகும். சுகாதாரத்துறை மட்டுமல்லாது அனைத்துத் துறைகளிலும் Covid19 நோய்த்தொற்றுத்  தாக்கத்தின் பாதிப்பு மிகவும் உக்கிரமானதாக உள்ளது. ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான மக்கள் Covid19 தொற்றுக்குள்ளாகுவதுடன் பலர் இறந்து கொண்டிருக்கின்றார்கள். நாளுக்கு நாள் Covid19 நோயின் தாக்கம் தீவிரமாகிக் கொண்டே செல்கின்றது. இதனால் அனைத்துத் துறைகளின் நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்து காணப்படுகின்றது. வர்த்தகத் துறையிலும் இந்த நிலைமையே காணப்படுகின்றது.

வீதிகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. அத்தியாவசியத் தேவைகளின் நிமித்தமே மக்கள் வெளியில் வருகின்றார்கள். ஒரு வாரத்திற்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்த மக்கள் தற்போது 2 மாதங்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்து சேமித்து வைத்துள்ளார்கள். பல நாட்கள் கொள்வனவு செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் தற்போது அதிக விலையில் வியாபாரிகளால் விற்பனை செய்யப்படுகின்றன. பொருட்களுக்கான தட்டுப்பாடு சந்தையில் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்குச் சான்றாக இலங்கையில் விற்பனை செய்யப்படும் மஞ்சளின் விலையினை கருத்திற் கொண்டால் Covid19 நோய்க்கு முன்னர் மஞ்சளின் விலை குறைவாகக் காணப்பட்டது ஆனால் தற்போது 1kg மஞ்சள் 1000 ரூபாய்க்கும் அதிகமாக  விற்பனை செய்யப்படுகின்றது.

பல நாடுகளில் அதிக வருமானத்தை ஈட்டித் தருகின்ற துறையாக உல்லாசப் பிரயாணத் துறை காணப்படுகின்றது. Covid19 தாக்கத்தினால் உல்லாசப் பயணிகளின் வருகை சடுதியாகக் குறைந்து உல்லாசப் பிரயாணத் துறை வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது. நாடுகளுக்கிடையிலான போக்குவரத்துச் சேவைகள் தடைப்பட்டுள்ளன. அனைவருமே வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றார்கள். நாட்டிற்கு அதிக இலாபத்தைப் பெற்றுத் தந்த உல்லாசப் பிரயாணத் துறையில் தற்போது எவ்வித வருமானமும் இல்லை. அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. “Business as usual” என்னும் பதத்தினை மக்கள் பயன்படுத்துவதற்கு அதிக நாட்களாகுமென என தற்போதைய நிலைமையினை வைத்துக் கூற முடியும்.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கெல்லாம் மிகுந்த தட்டுப்பாடு நிலவுகின்றது. சான்றாக Car உற்பத்தியினை எடுத்துக் கொண்டால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் உதிரிப் பாகங்களுக்கான பற்றாக்குறை நிலவுகின்றது. சீனாவில் Car உற்பத்தித் தொழிற்சாலைகள் வழமை நிலைக்குத் திரும்பினாலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் தொழிற்சாலைகளைத் திறப்பதற்கான சிக்கல்கள் தற்போதும் நிலவுகின்றது. தற்போது 12% விற்பனை வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கும் Car விற்பனை இனிவரும் காலங்களில் 9% ஆக காணப்படுமென கணிப்பிடுகின்றார்கள்.

சிறிய அளவில் செயற்படுகின்ற வர்த்தக நிறுவனங்கள், பெரிய அளவில் செயற்படுகின்ற நிறுவனங்கள் அனைத்தும் அதிக வீழ்ச்சியை சந்தித்துக்  கொண்டிருக்கின்றன. Covid19 நிலை மேலும் தொடர்ந்தால் சிறு வர்த்தக  நிறுவனங்கள் தமது சேவையினை இடைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத் தேவை உருவாகும். பலர் வேலையிழந்து வறுமையில் வாடுகின்றார்கள். இந்த நிலை மேலும் தொடர்ந்தால் அனைத்துத் துறைகளும் அதிக வீழ்ச்சியை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.