இன்றைய காலத்தில் பெரும்பாலான விவசாயிகள் ஏழ்மையான  வாழ்க்கை முறையினையே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் விவசாயப் பொருட்களை விற்பனை செய்கின்ற, ஏற்றுமதி செய்கின்ற தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ அதிக வருமானத்தை விவசாயத்தின் மூலம் பெற்றுக்கொள்கின்றன. இவ்வாறு இவர்கள் பெற்றுக்கொள்ளும் இலாபங்கள் விவசாயிகளுக்கு சிறந்த முறையில் கிடைக்காததன் காரணமாகவே அவர்கள் இன்றும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்குக்கின்றனர். தற்போது விவசாயிகள் அனைவரும் தங்களுடைய நிலங்களில் பல்தேசிய நிறுவனங்களின் கூலித் தொழிலாளிகளாக விவசாயம் செய்து கொண்டிருக்கின்றார்கள். இந் நிலை மாற வேண்டுமாயின் விவசாயம் செய்கின்றவர்கள் நேரடி இலாபம் பெறுகின்றவர்களாக மாற்றம் பெற வேண்டும்.

“உழைக்கும் எண்ணமோ உயர்வு தரும். உழவன் எண்ணம் நமக்கு உணவு தரும். விவசாயம் காப்போம்.”

விவசாயிகள் பயிர்ச்செய்கை மேற்கொள்வதில் கை தேர்ந்தவர்களாக இருப்பினும் தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவதில் தோல்வியைச் சந்திக்கின்றனர். இந்த  நிலையானது விவசாய உற்பத்திகளை விநியோகிப்பவர்களுக்கும், பல்தேசிய  நிறுவனங்களுக்கும் அதிக இலாபத்தை சூறையாடக்கூடிய வாய்ப்பாக அமைந்துவிட்டது. இதனால் விவசாய உற்பத்திகளை விநியோகிப்பவர்களும், பல்தேசிய  நிறுவனங்களும் அதிக இலாபத்தைப் பெற்றுக் கொள்வதோடு விவசாயிகள் எப்போதும்  வறுமை நிலையையே சந்தித்து வருகின்றனர்.

இத்தகைய நிலை மாற்றம் பெற  வேண்டுமாயின் விவசாயத்தினை வணிகமயப்படுத்த வேண்டும். தனிநபர்களாலும், பல்தேசிய நிறுவனங்களினாலும் உருவாக்கப்பட்டுள்ள வணிக வலைப்பின்னலை அறிந்து விவசாயிகள் வாடிக்கையாளர்களை நேரடியாக அணுகும் முறையினை கண்டறிய வேண்டும். ஆனால் இது இலகுவாக நடைமுறைப்படுத்தக்கூடிய விடயம் அல்ல. அனைத்தையும் ஆராய்ந்து திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும். தனிநபர்களாலும், பல்தேசிய நிறுவனங்களினாலும் உருவாக்கப்பட்டுள்ள வணிக வலைப்பின்னலை விவசாயிகள் ஊடுருவினால் அதிக இலாபத்தினைப் விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இலங்கையில் செயற்படுத்தப்படும் இயற்கை வேளாண்மையானது (Organic Agriculture) ஒரு பயிரினை உற்பத்தி செய்வதற்கு  பயன்படுத்தப்படும் மண்ணிலிருந்து பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்தப்படும் உரம் மற்றும் முடிவுப்பொருட்கள் வாடிக்கையாளர்களைச் சென்றடையும் வரை செயற்கையான இரசாயனப் பயன்பாட்டினை முன்னெடுக்காத வகையில் பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதாகும். இந்த வேளாண்மைப் பயிர்ச்செய்கையின் மூலம் உற்பத்தியாளர்களை விட அதை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சென்று விற்பனை செய்பவர்களே அதிக இலாபத்தினைப் பெற்றுக்கொள்கின்றனர். இதற்குச் சான்றாக கிளிநொச்சியில் இயற்கை வேளாண்மை மூலம் உற்பத்தி செய்யப்படும் பப்பாசிப்பழங்கள் உற்பத்தியாளர்களிடமிருந்து கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரையில் பெற்றுக்கொள்ளப்பட்டு உள்நாட்டு சந்தையில் கிலோ ரூ.200 இற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் போது குறைந்தது ரூ.500 இற்கும் விற்பனை செய்யப்படுகின்றது. இதனை ஆராயும் போது உற்பத்தியாளர்கள் குறைந்தளவான இலாபத்தையே பெறுகின்றனர். இதற்கான காரணம் பயிற்செய்கை உற்பத்தியாளர்களுக்கு  சந்தைப்படுத்தல் தொடர்பில் போதியளவு அறிவில்லாமையும், வாடிக்கையாளர்களைப் பற்றி அறிந்து கொள்ளாமையும், உற்பத்திகளைக் கொண்டு சென்று சந்தைப்படுத்துவதற்கு அதிக வேலைப்பளு காணப்படுவதனாலும் இலாபத்தை உற்பத்தியாளர்கள் இழக்க வேண்டிய நிலை உருவாகின்றது.

சிறந்த இலாபத்தினைப் பெற முடியாத விவசாயிகள் விவசாயம் சார் செயற்பாடுகளிலிருந்து விலகிக் கொள்கின்றனர். இந் நிலையிலிருந்து விவசாயிகள் மீண்டெழ வேண்டுமாயின் உற்பத்தியாளர்கள் தமது விவசாய உற்பத்திப் பொருட்களை  நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு சந்தைப்படுத்துவதற்குத் தேவையான வழிமுறைகளை அறிந்து செயற்படுத்த வேண்டும்.

தற்போது விவசாயிகளில் பெரும்பான்மையானோர் தமது பிள்ளைகளுக்கு விவசாய நடவடிக்கைகளைக் கற்றுக்கொடுக்க மறுக்கின்றார்கள்.  தமது பிள்ளைகள் நம்மைப்போல பாடுபடமால் சிறந்த தொழிலைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இதற்கான காரணமாக அமைவதோடு; தற்போதுள்ள விவசாய நிலைமையும், விவசாயிகள் எதிர்கொள்ளும் துன்பங்களுமே இதற்கான அடிப்படைக் காரணிகளாகும். ஆகவே இதனைக் கருத்திற் கொண்டு விவசாயத்தை மேற்கொள்ளக்கூடிய புதிய கற்கை நெறிகளை உருவாக்கி மாணவர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். இவ்வாறான புதிய கற்கைநெறிகளை உருவாக்குவதன் மூலம் இளையோரை விவசாயம் சார் செயற்பாடுகளில் ஈர்த்துக்கொள்ள முடியும். தற்காலகட்டத்தில் விவசாயம் சார் உற்பத்திகளில் ஈடுபடுபவர்கள் தம் உற்பத்திகளை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்லக்கூடிய வழிமுறைகளை உள்ளடக்கிய புதிய கற்கைநெறியினை உருவாக்குவது கட்டாயமானதாகும்.

விவசாயிகள் அதிகளவு இலாபத்தினைப் பெற வேண்டுமாயின் விவசாயம் சார் உற்பத்திப் பொருட்களை விற்பனை  செய்யும் தனிநபர்களும், பல்தேசிய நிறுவனங்களும் இணைந்து உருவாக்கியுள்ள வணிக வலைப்பின்னலை ஊடுருவி விவசாயிகள் செயற்படுவதற்கான வாய்ப்பினை அரசாங்கம் உருவாக்கிக் கொடுப்பதோடு விவசாயத்தினை வணிகமயப்படுத்துவதற்கான புதிய கற்கைநெறிகளையும் இளம் சமுதாயத்தினருக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.