சமூக வலைத்தளப் பாவனை இன்றைய காலத்தில் அதிகமாக காணப்படுகின்ற வேளையில் Deepfake தொழில்நுட்பம் பற்றி நிச்சயம் நீங்களும் அறிந்திருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு மூலமாக உருவாக்கப்படுகின்ற முற்று முழுவதுமாக உண்மைச் சம்பவம் போலவே தோற்றமளிக்கின்ற 100% ஆன போலிப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் “Deepfake தொழில்நுட்பம்” என்று அழைக்கப்படுகின்றது. இதன் மூலமாக ஒருவருடைய முகத்தினை அவரது அனுமதி இல்லாமலேயே மற்றுமொருவருடைய முகத்தின் மேல் பொருத்த முடியும். இவ்வாறு பொருத்தப்படும் போது அந்த விடயத்தை அவர் செய்யாதிருப்பினும் அவர் அந்த விடயத்தை செய்ததைப் போல சித்தரிக்கப்படுகின்றார்.
இத்தகைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களினால் நடைபெறும் குற்றங்கள் எண்ணிலடங்காதவை. உலகில் பிறக்காத ஒருவருரை வரைந்தும் இவற்றை உருவாக்க முடியும். இவை அனைத்திற்கும் அடிப்படையாக அமைந்தது Face Recognition Technology எனப்படும் “முகம் கண்டறிதல் தொழில்நுட்பம்” ஆகும். இருப்பினும் இத்தகைய தகவல்கள் போலியென Fact Check மூலம் ஓரளவிற்கு கண்டறிய முடியும். சாதாரண மக்கள் பலரின் வாழ்க்கை Deepfake தொழில்நுட்பம் மூலம் சீர்குலைந்தது மட்டுமல்லாமல் பல தற்கொலைகளும் இதனால் நடைபெற்றிருக்கின்றன என்றே கூற வேண்டும்.
செயற்கை நுண்ணறிவின் உதவியோடு போலி வீடியோக்கள் மிக எளிதாக உருவாக்கப்படுகின்றது. இந்த வீடியோவில் ஒருவர் பேச வேண்டிய விடயத்தை குறுஞ் செய்தி மூலமாக அனுப்பும் போது அதை வீடியோவில் குறிப்பிட்ட நபர் பேசுவதாக வீடியோக்கள் உருவாக்கப்படும் மென்பொருள்களும் தற்போது உருவாகிவிட்டன. இதற்குச் சான்றாக Facebook நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் என்பவரைப் பற்றி அவதூறு பேசும் படியான வீடியோவொன்றினை போலியென குறிப்பிட்டு வெளியிட்டிருந்தார்கள். ஆனால் திடீரென இதைப் பார்ப்பவர்களுக்கு உண்மை போலவே காட்சியளித்தது. இவ்வாறாக பல வீடியோக் காட்சிகளும், புகைப்படங்களும் தற்போது வரை வெளியாகிக் கொண்டே உள்ளன.
Deepfake தொழில்நுட்பமானது பல்வேறு துறைகளிலும் பல்வேறு தாக்கத்தினை உருவாக்குகின்றது. இத் தொழில்நுட்பத்தின் வழியாக நாடுகளுக்கிடையிலான போர் தொடங்கி வீட்டிலும் பிரச்சினைகள் உருவாவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. ஆகவே இது குறித்து நாம் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும். Deepfake தொழில்நுட்பமானது மேலும் வளர்ச்சியடைந்து செல்வதைத் தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளாவிடினும் இத் தொழிநுட்பமானது முறை கேடான செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதை தவிர்க்கக் கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.