பூவுலகில் வாழும் ஒவ்வொரும் தான் வாழும் போது சிறப்புடனும், எவ்வித குறையுமின்றியும் வாழவேண்டும் எனும் நோக்குடனேயே தன் வாழ்க்கை பயணத்தை தொடருவோம். இதற்காக நாம் தேர்ந்தெடுக்கும் வழிதான் வர்த்தகம். சிறு வணிகமாக இருப்பினும் சரி; உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் வணிகமாக இருப்பினும் சரி அங்கு மனிதனின் கடின உழைப்பு முக்கியமானது. கடின உழைப்பினால் மாத்திரமே ஒவ்வொருவரும் தான் குறித்த இலக்கை அடைய முடிவதோடு வாழ்க்கையில் நிறைவுடன் வாழ கூடிய சூழ்நிலை அமையும்.
”உளி விழுவது வலி என்று அழும் கற்கள்; கற்கள் ஆகுமே தவிர சிற்பங்களாக!” எனும் வார்த்தைக்கு அமைய ஒரு தொழிலை ஆரம்பித்து அதனை நடாத்திச் செல்லும் போது பல தடைகளும், எதிர்ப்புகளும் நிச்சயம் உளி போல நம்மை தாக்கும். எவ்வாறிருப்பினும் அதற்கேற்ற வகையில் வளைந்து கொடுத்து செல்வதன் மூலமே நாம் நினைத்த இலக்கினை அடைந்து கொள்ள இயலும். ஒரு தொழில் முயற்சியில் ஈடுபடும் போது பலருடைய ஒத்துழைப்பும் நமக்குத் தேவைப்படும். ஆகையினால் அளவுக்கதிகமான உறவினை ஏற்படுத்திக் கொண்டு மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் சமரசத்துடன் சேர்ந்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
கடின உழைப்பினால் தோற்ற மனிதன் என்று இங்கு எவரும் இல்லை. உங்கள் மனதில் தோன்றுவதை உங்கள் செயலில் செயற்படுத்த முனையுங்கள். அத்தோடு பல தடைகளையும் சமாளித்து முன்னேறியவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப் பழகுங்கள். இதனால் புதிய பாதையை நோக்கி உங்களால் பயணிக்க முடியும். சிறு தொழிலாக இருந்தாலும் சரி அவன் தனது கடின உழைப்பினால் முன்னேறி தன் இலட்சியத்தை அடைவானாயின் அவனே மதிப்பிற்குரியவன். இவ்வுலகில் நாம் மதிக்கும் சில பெரியார்கள் கூட ஏழையாக இருந்து தன் கடின உழைப்பினால் முன்னேறி நல்ல நிலையை அடைந்தவர்கள் தான். இதற்கு சான்றாக ஆபிரகாம் லிங்கன், அப்துல் கலாம் எனப் பலரது வாழ்க்கையினைக் கூறலாம்.
”ஒரு மனிதன் தன் பிள்ளைகளுக்கு செல்வத்தை சேர்த்து வைப்பதைவிட, உழைக்கும் பழக்கத்தைக் கற்றுக் கொடுப்பது அவர்களுக்கு வாழ்க்கையில் வெற்றியை தரும்.” என்று மொழிந்தார் ரிச்சர்ட் வாட்லி. எனவே நாம் எவ்வாறு கடின உழைப்பினால் முன்னேற்றத்தை கண்டு கொண்டோம் எனவும்; முன்னேறுவதற்கான வழியையும், நாம் உழைக்கும் போது ஏற்ப்பட்ட வெற்றி, தோல்விகளைப் பற்றியும் நமது வருங்கால சந்ததியினருக்கும் கற்றுக்கொடுப்போம். அவர்களும் சமூகத்தில் தலைநிமிர்ந்து வாழ சந்தர்ப்பம் அளிப்போம்.
wow .. nice