மெக்ஸிகோவிலுள்ள சிறிய கடற்கரைக் கிராமமொன்றிற்கு ஒரு முறை அமெரிக்க முதலீட்டு வங்கி அதிகாரியொருவர் சென்றிருந்தார். அவர் அங்கு சென்ற நேரத்தில் மீனவரொருவர் தனது சிறிய படகு நிறையும் படியாக அதிக மீன்களுடன் கரையை வந்தடைந்தார். மீனவர் கொண்டு வந்த மீன்களின் தரத்தினைக் கண்டு வியந்த அதிகாரி மீனவரிடம் “இந்த மீன்கள் அனைத்தையும் பிடிப்பதற்கு செலவாகிய நேரம் எவ்வளவு?” என்று வினவ மீனவர் மறுமொழியாக “சிறிது நேரமே ஆனது” என்றார். .

நீங்கள் கடலில் அதிக நேரம் செலவிட்டு அதிக மீன்களைப் பிடித்திருக்கலாமே?” என்று அதிகாரி கேட்க; “எனது குடும்பத்தினைப் பராமரிக்க இதுவே போதுமானது” என்று மீனவர் கூறினார்.

மேலும் மீனவரிடம் கேள்வியெழுப்பிய அதிகாரி “மீன் பிடிக்கும் நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் நீங்கள் செய்வது என்ன?” என்று கேட்டார். அதற்கு மீனவர் காலை வேளையில் தாமதமாக எழுந்து; எனது வழமையான வேலைகளையெல்லாம் முடித்து விட்டு; இறைவனை வணங்கி சிறிது நேரம் மீன் பிடிப்பதற்கு கடற்கரைக்குச் செல்வேன். வீடு திரும்பியதும் எனது குழந்தைகளுடன் விளையாடிவிட்டு; எனது மனைவியுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு; குட்டித் தூக்கம் போடுவேன். மாலையானதும் எனது கிராமத்தில் மது அருந்திவிட்டு; சில நேரங்களில் எனது நண்பர்களுடன் இசைக்கருவிகள் வாசிப்பேன். எனது நாட்கள் முழுவதும் மகிழ்ச்சியாக அமையும் என்றார்.”

இவ்வாறு மீனவர் கூறியதும் அந்த அதிகாரி மீனவருக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். “நான் அமெரிக்க முதலீட்டு வங்கி  அதிகாரியாக இருக்கின்றேன். உங்களுக்கு உதவி செய்ய வேண்டுமென நினைக்கின்றேன். நீங்கள் அதிக நேரம் மீன்பிடித்து; மீனை விற்று வரும் இலாபத்தின் மூலம் பெரிய படகினை வாங்க வேண்டும்; அந்த படகின் மூலம் மீன் பிடித்து வரும் இலாப பணத்தின் மூலம் இன்னும் பெரிய படகுகளை வாங்க வேண்டும். இவற்றை பின்பற்றி செயற்பட்டால் நீங்கள் பணக்கார மீனவர் ஆவீர்கள்.  பணக்காரர் ஆகிய பின்னர் நீங்கள் பல இடங்களையும் பார்வையிடலாம் என்றார்.” 

இவை அனைத்தையும் செய்து முடிப்பதற்கான கால அளவு எவ்வளவு?” என்று கேட்டார் மீனவர்.இதற்கு 15 – 20 வருடங்கள் ஆகும்” என அதிகாரி கூறினார்.பிறகு என்ன நடக்கும்?” என்று மீனவர் கேட்டார். அதற்கு அதிகாரி சிரித்துக்கொண்டே “நீங்கள் ஆரம்பிக்கும் நிறுவனத்தை  பங்கு சந்தையில் IPO அறிவித்து, நிறுவன பங்குகளை பொது மக்களுக்கு விற்று நீங்கள் பெரும் பணக்காரராகலாம்” என்றார். 

“பெரும் பணக்காரராகிய பின்னர் நான் என்ன செய்வது? என்று கேட்டார் மீனவர். அதற்கு அதிகாரி “காலை வேளையில் தாமதமாக எழுந்து; உங்கள் வழமையான வேலைகளையெல்லாம் முடித்து விட்டு; இறைவனை வணங்கி சிறிது நேரம் மீன் பிடிப்பதற்கு கடற்கரைக்குச் செல்லலாம். வீடு திரும்பியதும் உங்கள் பேரக்குழந்தைகளுடன் விளையாடிவிட்டு; உங்கள் மனைவியுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு; குட்டித் தூக்கம் போடலாம். மாலையானதும் உங்கள் கிராமத்தில் மது அருந்திவிட்டு; சில நேரங்களில் உங்கள் நண்பர்களுடன் இசைக்கருவிகள் வாசிக்கலாம். உங்கள் நாட்கள் முழுவதும் மகிழ்ச்சியாக அமையும்” என்றார்.

இதைக் கேட்ட மீனவர் சிரித்து விட்டு; “அதை தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கின்றேன் வாழ்க்கைக்கு பணம் தேவை தான். ஆனால் பணத்திற்காக வாழ்க்கை மாறி விடக் கூடாது. மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தேவையான பணத்தினை உழைத்துவிட்டு நிம்மதியாக வாழ வேண்டும்” என்றார்” மீனவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.