இவ்வுலகில் வாழும் மனிதன் ஒரு தொழிலை ஆரம்பிக்க முக்கியமாக தேவைப்படுவது பணம் என்றே நினைக்கின்றான். ஆனால் பணம் என்பது இங்கு மனித திறமையை விட தொழிலுக்கான மதிப்புவாய்ந்த முதலீடு அல்ல. செல்வந்தர்களிடமோ அல்லது பாமர மக்களிடமோ “ஒரு தொழிலை தொடங்க தேவையானது என்ன?” என்ற கேள்வியை எழுப்பினால் இதில் ஒற்றுமையாக இவர்கள் கூறும் பதில் “பணம்” என்பது தான். இந்த பதில் தற்போது உலக நியதி ஆகிவிட்டது. ஒருவன் ஒரு தொழிலை ஆரம்பிக்க தயங்கி நிற்பது பணம் இல்லை என்ற காரணத்தினால் மட்டுமே. இனியாவது மனிதா விழித்தெழு!! தொழிலின் முதலீட்டுக்கு உன் திறமை ஒன்றே போதுமானது என்று முடிவெடு; அனைத்திலும் உயர்ந்தவனாய் விளங்குவாய்.
தொழில் செய்வதற்கு பணம் மட்டுமே வேண்டும் என்றிருந்தால் பரம்பரை செல்வந்தன் மட்டுமே தொழில் தொடங்கி தற்போது உலகில் முதல் பணக்காரனாக வலம் வந்திருப்பான் ஆனால் தன் திறமையே தன் தொழிலின் முதலீடு என்று கருதி தற்போதய உலகின் முதல் செல்வந்தனாக திகழ்பவர் பில் கேட்ஸ். இவ்வாறு பல மனிதர்களும், சாம்ராஜ்ஜியங்களும் உருவாக பணம் மட்டும் காரணம் இல்லை அவர்களின் திறமையே காரணம் என்று கூறுவது சாலச்சிறந்தது.
நம்முள்ளும் நம்மை சார்ந்து பல திறமைகள் உள்ளன. அது உழைக்கும் ஆற்றலாகவோ அல்லது மூளையாகவோ இருக்கலாம். அத்தோடு உலகஞானம்,தொழில்நுட்ப அறிவு , தலைமைத்துவப் பண்பு, கற்பனைத் திறன், கால நேரம் அறியாமல் நினைத்ததை அடைய துடிக்கும் உழைப்பு, விடா முயற்சி,பேச்சுத் திறமை , தேடிக்கொண்டே இருக்கும் மனம் , பற்றி எரிகிற ஆசை (Burning Desire), தன்னம்பிக்கை ,தைரியம் ,தெளிவான குறிக்கோள்,எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள ஏங்கும் மனப்பான்மை…. இவ்வாறான பல திறன்களும் முதலீடுதான் என்பதை மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் ஆரம்பிக்க இருக்கும் தொழிலுக்காக உங்கள் கைவசம் எது அதிகம் உள்ளதோ அதை முதலீடு செய்ய ஒரு போதும் தயங்காதீர்கள். அது உங்கள் திறமையாகவோ அல்லது இடைவிடாத உழைப்பாகவோ இருக்கலாம். ”ஒரு முறை நீ ஏதாவது ஒரு இலக்கை இதய பூர்வமாக தீர்மானித்து விடுதல், இந்த பிரபஞ்சமே திட்டமிட்டு அந்த இலக்கை அடைய துணை புரியும்” என்ற எமர்சனின் வாக்கிற்கு அமைய நீங்கள் உங்கள் திறமையை கொண்டு ஒரு தொழிலை தொடங்கிய பின்னர் அனைவரும் உங்களோடு துணையாக வருவதோடு, தானாகவே நீங்கள் எதிர் பார்க்கும் அனைத்தும் உங்களை வந்து சேரும்.