1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

”புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள், மாதத்திற்கு ஒரு புத்தகத்தையாவது, படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” என எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் கூறினார். மாதம் ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது நமது அறிவானது வளர்ச்சி பெறுவதோடு தலைமைத்துவப்பண்புகளைப் பெற்று வர்த்தகத் துறையிலும் சாதிக்கக் கூடிய மன வலிமையை பெற்றுக்கொள்ள முடியும்.

2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

“அன்னம் ஒடுங்கினால் ஐந்தும் ஒடுங்கும் ” என்ற பழமொழி உண்டு. நாம் உயிர் வாழ்வதற்கு உணவு இன்றியமையாத ஒன்று. ஆகவே ஒவ்வொருவரும் இதை உணர்ந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயன பொருட்கள் கலந்த உணவுகளைத் தவிர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உணவுகளை உண்பதன் மூலம் நம் வாழ்வை சிறப்பு மிக்கதாக மாற்றி வாழ்வின் இலட்சியங்களை அடைந்து கொள்ளலாம்.

3. உங்களுக்கு என்ன வயதானாலும் பறவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

“யார் ஒருவர் எதை அடைவதற்கு தகுதி உடையவராக இருக்கிறாரோ அதை அவர் அடையாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்த பிராபஞ்சத்தித்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது” என்று கூறினார் சுவாமி விவேகானந்தர். தனக்கு விருப்பமான துறைகளில் முன்னேற துடிக்கும் ஒரு மனிதனுக்கு வயது ஒரு பொருட்டு அல்ல. ஆகவே தன் முன்னேற்ற பாதையில் தடைகள் வந்தாலும் தடைகளை தவிர்த்து முன்னோக்கி செல்ல வேண்டும்.

4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

ஒருவர் ஒரு தொழிலை மேற்கொள்ளும் போது மிகவும் நேர்மையான வழியில் செய்ய வேண்டும். யாரிடமும் எதற்காகவும் இலாப நோக்கத்துடன் பிழையான ஒப்பந்தங்களை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒருவரின் நேர்மையான வர்த்தக முறைகளையே பலரும் விருப்புடன் நோக்குவர். ஆகவே நேர்மையுடன் செயற்படும் போது வெற்றிகள் உங்களைத் தேடி வந்து சேரும்.

5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள். 

கடன் வாங்குவதன் மூலம் நிம்மதியற்ற வாழ்க்கையை பெற்றுக் கொள்கின்றான் மனிதன்.  ஒவ்வொரு மதமும் கடன் வாங்குவதும் தவறு;  கடன் கொடுப்பதும் தவறு என்று வலியுறுத்துகின்றன. ஒருவன் கடன் வாங்கிய பிறகு அதனை எவ்வாறு கொடுத்து முடிப்பது  என்பதைப்பற்றி சிந்திப்பதிலேயே அவனது வாழ்க்கை முடிந்து விடுகிறது. எனவே நம்மிடம் இருப்பதைக் கொண்டு வாழ்க்கையை சுவாரஸ்யமானதாக வாழ பழகிக் கொள்வதோடு; வாழ்விலும் சரி தொழில் துறைகளிலும் சரி முன்னேறுவதற்கான பல மாற்று வழிகளையும்  கண்டறிய முடியும்.

6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

நாளை செய்யலாம் என்று பிற்போடுவதை விட்டு செவ்வனே திட்டமிட்டு செயற்பாடுகளை இன்றே  மேற்கொள்வதன் மூலம் முடியாத காரியத்தையும் இலகுவாக செய்து முடிக்கலாம். ஏனெனில் திட்டமிட்டு செயற்படுவது வர்த்தகத் துறையில் மிக இன்றியமையாத ஒரு விடயமாகும். வர்த்தகப்பாதையில் முன்னேற்றத்தினை பெற இந்த முறையினை செயற்படுத்துவோம்.

7. முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

மனிதன் முதுமைப்  பருவத்தை அடையும் போது தானாகவே நோய்கள் நம்மை வந்து சூழ்ந்து கொள்ளும்.  ஆகையினால் இயன்றவரை நாம்  உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் உணவு முறைகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். வயதில் முதுமையை தழுவினாலும்; நமது திறமையில் முதுமையைக்  காட்டவேண்டும். ஆகவே வயது முதுமையினால் ஏற்படும் நோய்களுக்கு எதிரான உணவு பழக்கங்களை கடைப்பிடித்து முதுமையடைந்த திறமையினை வெளிக்காட்டுவதன்  மூலம் நம் வாழ்க்கை பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும்.

8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

காலை உணவு ஒவ்வோர்  மனிதனுக்கும் மிக அவசியமானது. காலை உணவினை உரிய நேரத்திற்கு உட்கொள்ளாமையினாலேயே நோய்கள் மனிதனை தாக்குகின்றன. காலை உணவினை ஒருநாள் உட்கொள்ளாது விடின்  அந்த நாள் சுறுசுறுப்பற்ற  நாளாக மாறிவிடும். எனவே உற்சாகத்துடன் நம் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமாயின் ஒவ்வொரு நாளும் தகுந்த நேரத்திற்கு காலை உணவினை உட்கொண்டு நம் அன்றாட  செயற்பாடுகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

ஒரு விடயத்தை எடுத்துரைக்கும் போது தயக்கமின்றி நேராக நின்று அவர்களின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். ஏனெனில் நாம் இவ்வாறு பேசும்போது நாம் கூறவந்த விடயம் மக்களை இலகுவாக சென்றடையக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஒருவரின் சிறப்பான நடை, உடை, பாவனையை வைத்தே அவரை உலகம் மதிப்பிடுகிறது. ஆகையினால் வாழ்க்கையில் உயர்நிலையை அடைய வேண்டுமாயின் இவ்வாறான அடிப்படைப் பண்புகளை தன்னகத்தே கொண்டு செயற்பட வேண்டும்.

10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.

மலர்ந்த முகத்துடன் ஒருவரை நாம் வரவேற்கும் போது  அவருக்கு தன்னையறியாமலேயே நம்மீது ஒரு மதிப்பு  உண்டாகிவிடும். இத்தகைய பண்பே  நாம்   வெற்றிவாகை சூட  அடித்தளமாக அமைகிறது. வாழ்வில் துன்பங்கள் சூழ்ந்த போதிலும் ஒரு புன்னகை போதும் துன்பங்கள் சூரியனைக் கண்ட பனி போல விலகி விடுவதற்கு. மேலும் வர்த்தகத் துறையில் ஒரு உற்பத்தி, சேவையினை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமாயின் பேச்சுத் திறமையும் முக்கியமானதொன்றாகும் இன்முகத்துடன்  கைகோர்த்த பேச்சுத்திறமையைக்  கொண்டு   நாம் நினைத்த இலட்சியத்தை அடைய முடியும்.

11. வாரம் மூன்று முறையாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.

உடற்பயிற்சி என்பது எமது தேகஆரோக்கியத்தை வளமுடன் பேண  மேற்கொள்ளக்கூடிய ஒரு செயற்பாடாகும். தற்காலத்தில் அனைவரும் கூறும் பெரும் குறை பருத்த உடலும், நோய்களும் உடலில் அதிகரித்துவிட்டன என்பதுதான். ஆனால் மனிதர்களாகிய நாமே தேடிக்கொண்ட வினைகள். சொகுசு வாகனங்கள் அதிகரித்து  விட்டமையால் நடப்பதற்கான வசதி நவீன யுகத்தில் முற்று முழுதாக குறைந்துவிட்டது. வாரம் ஒரு முறையாவது உடற்பயிற்சி செய்வது மட்டுமல்லாமல்  நடந்து செல்லக்கூடிய இடங்களில் நடந்து சென்று பாருங்கள் உங்கள் உடல் தேகாரோக்கியத்தைப் பெறுவதோடு மட்டுமல்லாமல் நீங்கள் நினைத்த இலக்கையும் பல்வேறு துறைகளிலும் அறிந்துகொள்வீர்கள்.

12. சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் போது  சிறு குறிப்புக்கள், கடிதங்கள், கட்டுரைகள் எழுத வேண்டிய சூழ்நிலைகள் அதிகம் உருவாகும் எனவே அவற்றை எழுதும்போது எழுத்துப்பிழைகள் , பந்தி அமைப்புகள், சிறந்த மொழிநடை இல்லாமல் எழுதுவதைத்  தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒருவர் அதை வாசிக்க முனையும் போது இத்தகைய பிழைகள்  அவர் மனதில் சாதகமற்ற சிந்தனைகளை உருவாக்கி விடுவதோடு; அந்த நிறுவனத்தைப் பற்றியும் சில மாறுபட்ட சிந்தனைகள் உருவாகும் ஆகவே சிறு குறிப்பாயினும்  சரி,  பெரிய கட்டுரைகளாயினும் சரி பிழையின்றி எழுதுவதை வழக்கமாக்கிக் கொள்வோம்.

13. ஒருவர் இல்லாத போது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

ஒருவரைப்பற்றி குறை கூறுவதை விடுத்து அவரிடம் உள்ள திறமைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் ஒருவரைப்பற்றி குறை கூறும் போது நம்மை நாமே தாழ்த்திக் கொள்கின்றோம். ஆகையினால் குழுக்களாக சேர்ந்து விடயங்களைப் பகிரும் சந்தர்ப்பங்களில் பிறரை குறை கூறுவது தவிர்த்து  நிறைவான விடயங்களைக்  கூறுவதன் மூலம் நம் வாழ்க்கையை முன்னேற்றி செல்வதோடு  நமது வாழ்க்கைப் பயணத்தில் நம்மோடு இணைபவர்களும்  நம்மில் நன்மதிப்பு கொண்டு உண்மைத் தன்மையுடன் செயற்படுவார்கள்.

14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

நாம் முன்னேற தடையாக இருப்பது அரட்டை பேச்சுக்களும், தேவையற்ற விவாதங்களும் ஆகும். தேவையான இடத்தில் தேவையான விடயங்களை மாத்திரம் கூறி   நமது செயற்பாடுகளை இலகுவாக  முடித்துக் கொண்டு செல்ல வேண்டும்.  இவ்வாறான அரட்டை பேச்சுக்களும், தேவையற்ற விவாதங்களுமே நமது நேரத்தை வீணாக்கி  நாம் பெற வேண்டிய இலக்கினை அடைய விடாமல் முறியடிக்கின்றன.  ஆகவே இதை உணர்ந்து எம்  வாழ்க்கைப் பொருளாதாரத்தினை  முன்னேற்றுவோம்.

15. மற்றவர்களின் தவறுகளை மன்னியுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

வேலைத்தளங்களாக இருப்பினும் சரி வேறு எந்த இடங்களாக இருப்பினும் சரி ஒருவர் செய்த தவறினை மன்னிக்கப் பழகுங்கள். அவர் மேலும் அந்த பிழையை செய்யாது தவிர்க்க ஊக்குவியுங்கள். ஆனால் ஒரு போதும் அந்த தவறினை மறக்காதீர்கள் ஏனெனில்  மறந்து செயற்படும் போது பலவற்றை இழக்க நேரிடும். மன்னியுங்கள் ஆனால் மறக்காதீர்கள். அதனை  மறக்காமல் செயற்பட்டால் மாத்திரமே அதனால் நிகழ்ந்த நிகழ்வுகளையும் மறக்காமல் இருக்க முடியும். இதனால் எதிர்காலத்திலும் அந்தப் பிழையினை  விடாதபடி முன்னோக்கிச் செல்ல முடியும்.

16. உங்கள் வாழ்வின் இரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

நீங்கள் ஒரு விடயத்தை உங்களுக்குள் இரகசியமாக வைத்திருக்கும் போது அந்த இரகசிய விடயம் பற்றியே அதிக கவனத்தை நீங்கள் செலுத்துவீர்கள். உங்களுக்குள் வைத்திருக்கும் அந்த இரகசிய விடயமானது பிறருக்கு எப்போது தெரிந்து விடும் என்ற அச்சத்துடனும் நீங்கள் மாற்று சிந்தனையுடன் செயற்படத் தொடங்குவீர்கள். இதனால் பல விளைவுகளையும் சந்திக்க நேரிடும் ஆகையினால் முடிந்தவரை உங்கள் வாழ்வின் இரகசிய அம்சங்கள் இல்லாதபடி பயணியுங்கள். இதன் மூலமாக மனமானது தெளிவு பெற்று உங்களது சிந்தனையும் உங்கள் வெற்றி இலக்கை நோக்கியதாக அமையும்.

17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

ஒரு மனிதன் தொடர்பினை ஏற்படுத்தும் முதல் அலகு குடும்பம் ஆகும். அதன் பின்னரே அவன் சமூகத்துடன் தொடர்பினை ஏற்படுத்துகின்றான். இருந்த போதிலும் மனிதன் சமூகத்திலுள்ள பொது   அமைப்புக்களுடன் இணைந்து செயற்படும் போதே அவனைப் பற்றி பிறர் அறிய முடியும். அவன் ஒரு விடயத்தை செய்ய முனையும் போது பல்வேறு அமைப்புக்களின் ஆதரவு அவனுக்கு நிச்சயமாக தேவைப்படும். ஆகையினால் பொது அமைப்புக்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் தான் நினைப்பதை நிறைவேற்றிக்கொள்ள ஏதுவாக அமையும்.

18.மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தவறிழைப்பது  உலக நியதி. ஆனால்  தவறே வாழ்க்கையாக மாறி விடக்  கூடாது. ஒருவர் தனது வாழ்வை முன்னேற்ற  வேண்டுமாயின் தான்  செய்த தவறுகளை எதிர்காலத்தில் மீண்டும் செய்யாத வண்ணம் திருத்திக்கொள்ள வேண்டும். ஆகையினால் மாதம் ஒரு முறையாவது உங்களது தகுதியையும், நீங்கள் இழைத்த பிழைகளையும் பட்டியலிடுங்கள். இதனால் நீங்கள் மீண்டும் தவறிழைக்கா  வண்ணம் உங்களை நீங்களே திருத்திக்கொள்ள முடியும்.

19. மற்றவர்களைப் பேச விடுங்கள்.

நீங்கள் எப்படிப்பட்ட அறிவாளியாக இருப்பினும் அவர்களது கருத்துக்களுக்கு  மதிப்பளியுங்கள். ஏனெனில் ஒருவரின் சிந்தனையை மற்றவருடன் ஒப்பிட்டு நோக்க முடியாது. நீங்கள் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டுமாயின் பிறரையும் பேச விடுங்கள். அவர்களின் பேச்சையும்  கேளுங்கள். இதனால் பல்வேறு  சிந்தனைகளின் மூலம் வெளிப்படும் கருத்துக்களைக் கொண்டு பல்வேறு மாற்றங்களை உருவாக்க முடியும்.

20.மற்றவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.

ஒருவருடன் தேவைக்காக மட்டும் பழகாமல் அவரது தேவைகளையும் அறிந்து அக்கறையுடன் நிறைவேற்றுங்கள். இதன் மூலம் பலரது ஒத்துழைப்பும் உங்களை சார்ந்து விளங்கும். நீங்கள் ஒருவருடன் அக்கறையாக செயற்படும்போது அவரது ஆற்றலையும், அறிவையும் இலகுவாக உங்களால் பயன்படுத்திக்கொள்ள முடியும். எனவே உங்களுக்கு உதவுபவரை புறக்கணியாது  அவரது தேவைகளுக்கு மதிப்பளித்து அவரை உங்களுடன் இணைத்துக்கொள்ளும் போது நீங்கள் நினைத்த இலக்கினை வலுவான துணைகொண்டு நிறைவேற்றிட முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.