YouTube என்பது ஒரு இலவசமான தளமாக காணப்படுகின்றது. ஆகையினால் YouTube Channel ஒன்றினை ஆரம்பிப்பதற்கு பணம் இல்லையெனினும் கையடக்கத் தொலைபேசியினைக் கொண்டே இதனை ஆரம்பிக்கலாம். அரசியல் மற்றும் அறிவியல் தொடர்பான காணொளிகளை YouTube இல் பதிவேற்றம் செய்பவர்கள் பெரும்பாலும் குறைந்தளவு வருமானத்தினையே பெற்றுக்கொள்கின்றார்கள். ஆனால் அழகுக் குறிப்புக்கள் மற்றும் சமையல் சம்பந்தமான YouTube Channels நடத்துபவர்கள் குறிப்பிட்ட அளவிற்கு அதிக வாடிக்கையாளர்களை பெற்றுக்கொள்ளும் போது அவர்கள் அதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்கின்றார்கள். சிலர் தமது நிறுவனங்களை மக்கள் அறியச் செய்வதற்காக YouTube Channels ஆரம்பித்து அதனை செயற்படுத்தி வருகின்றார்கள். அதுமட்டுல்லாமல் குறுந்திரைப்பட உரிமையாளர்கள் தமது குறுந்திரைப்படங்களைப் பிரபலப்படுத்துவதற்கு YouTube தளங்களைப் பயன்படுத்துகின்றார்கள். ஏனெனில் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதை விட YouTube இல் குறைந்த செலவில் பதிவிட முடியும்.
YouTube Channels வருமானத்தைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தாது என்று கூறுவதை விட ஆரம்ப நிலையில் காணப்படும் YouTube Channels வருமானத்தைப் பெற்றுகொள்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தாது என்று கூறுவதே சிறந்ததாகும். தற்போது அன்றாடம் Youtuber களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றமையினால் YouTube வருடாவருடம் YouTube இன் மூலமாக வருமானம் ஈட்டிக்கொள்வதற்கான அடிப்படைத் தகுதியை மாற்றிக்கொண்டு வருகின்றது. YouTube இன் இத்தகைய செயற்பாடானது ஆரம்ப நிலையிலுள்ள Youtuber களை மிகவும் பாதிக்கின்றது. எவ்வாறெனில் ஒருவர் YouTube Channel ஒன்றினை ஆரம்பித்து நடத்திக்கொண்டிருக்கும் போது அதில் நீங்கள் பணம் ஈட்டுவதற்கான அனுமதியைப் பெற முயற்சி செய்வீர்களாயின் நீங்கள் இரண்டு முக்கிய தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். அவையாவன; உங்களுடைய YouTube Channel இற்கு வாடிக்கையாளர்கள் (Subscribers) 1000 இற்கும் அதிகமாகக் காணப்பட வேண்டும். அத்தோடு முதல் 12 மாதங்களில் உங்கள் காட்சி நேரமானது (Watching Time) 4000 மணித்தியாலத்திற்கும் அதிகமாகக் காணப்பட வேண்டும்.
நீங்கள் YouTube இல் பதிவிடும் அனைத்து காணொளிகளுக்கும் YouTube இன் மூலமாக பணத்தினைப் பெற்றுக்கொள்ளலாம் என்று உறுதியாகக் கூற முடியாது. ஏனெனில் படைப்புத்திரட்டு தொடர்பான விதிகளை YouTube கடுமையாக அமுல்படுத்தியுள்ளது. இத்தகைய அறிவுரைகளைப் பின்பற்றி ஒருவர் கடினமாக உழைத்து தொடர்ந்து பல காணொளிகளை YouTube இல் பதிவேற்றினாலும் 1000 வாடிக்கையாளர்களை (Subscribers) பெற்றுக்கொள்வது கடினமாகக் காணப்படும். அவ்வாறு வாடிக்கையாளர்களைப் பெற்றுக்கொண்டாலும் ஆரம்பத்தில் YouTube மூலம் அவர்கள் பெற்றுக்கொள்ளும் பணம் குறைவாகவே காணப்படும். இதற்கான காரணம் அமெரிக்காவில் வரவேற்பை பெறுகின்ற ஒரு YouTube காணொளியின் சமமான அளவு வரவேற்பினை இந்தியாவில் ஒரு YouTube காணொளி பெற்றாலும்; அந்த காணொளிக்கு 20% – 40% ஆன பணவருமானத்தினை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும். ஏனெனில் அமெரிக்காவில் ஒரு விளம்பரத்திற்காக ஒரு நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளும் பணமானது இந்திய நிறுவனத்திடமிருந்து பெறுவதை விட மூன்று தொடக்கம் நான்கு மடங்கு அதிகமாகக் காணப்படும். ஆரம்ப நிலையில் உள்ள Youtubers ஒளிப்படக்கருவி உள்ளிட்ட பல உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு பெருந்தொகைப் பணத்தை செலவிட்டிருப்பார்கள். இதனை YouTube மூலமாக ஈட்டிக்கொள்வதற்கு பல மாதங்கள் கடந்துவிடும். அதனால் ஆரம்ப நிலையிலுள்ள Youtubers ஒரு நிலையான வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் வரையில் நீங்கள் ஆரம்பித்த YouTube Channel இனை பகுதிநேரமாக செயற்படுத்தி வருவது மிகவும் சிறந்தது.