“தேவையற்ற பொருட்களை நீ வாங்கிக்கொண்டேயிருந்தால் சீக்கிரத்தில் உனக்குத் தேவையான பொருட்களை விற்கவேண்டியிருக்கும்.”

ஒமாகாவின் அசரீரி [Oracle of Omaha], ஒமாகாவின் முனிவர் (Sage of Omaha) என சிறப்புப் பெயர்கள் கொண்டு விளங்கும் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான வாரன் எட்வர்ட் பஃபெட் தனது வாழ்வில் கற்றுக்கொண்ட விடயங்களை சிந்தனை வடிவில் முன்வைக்கின்றார்.

  • உங்கள் வாழ்க்கையை சிறப்பாக நடத்திச் செல்ல வேண்டுமெனில் வருமானத்தைப் பெற்றுக்கொள்ள ஒரு வழியினை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டாம். இரண்டாவதாக வருமானம் வரும் வழியையும் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். ஏனெனில் வருமானத்தைப் பெற்றுக்கொள்ளுகின்ற ஒரு வழியில் இழப்பினை சந்தித்தாலும் மற்றைய வருமான வழி உங்களை வளர்ச்சியடையச் செய்யும்.
  • உங்கள் தேவைக்கு அதிகமான பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டாம். தேவைக்கு அதிகமாக நீங்கள் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது உங்களுக்கான செலவு அதிகமாகக் காணப்படும். அளவிற்கு மீறி செலவு செய்யும் போது ஒரு கட்டத்தில் உங்களை வறுமை வந்து சூழும். இதனால் உங்களுக்கு தேவயானவற்றையும் விற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாவீர்கள்.
  • உங்கள் கடின உழைப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்தை முதலில் சேமியுங்கள். நீங்கள் சேமித்து மிகுதியாக இருப்பதை உங்கள் செலவுக்காக பயன்படுத்துங்கள். எப்போதும் செலவு செய்ததன் பிற்பாடு மிகுதியை சேமிக்கும் பழக்கத்தினைக் கொண்டிருக்காதீர்கள். சேமிப்பு என்பது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதொன்றாகும்.
  • எந்த விடயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுங்கள். “ஆற்றின் ஆழத்தை இரண்டு கால்களாலும் அளவிடக்கூடாது” ஒரு விடயத்தை ஆரம்பிக்கும் போது ஏற்படும் தடைகளைப் பற்றி சிந்தித்து முன்னெச்சரிக்கையுடன் செயற்படுங்கள். எதைத் தொடங்கினாலும் அதனை திட்டமிட்டு செயற்படுத்துங்கள்.
  • நீங்கள் ஒரு தொழிலை ஆரம்பித்து அதில் நட்டத்தினை சம்பாதித்துக்கொண்டால் அதற்காக மனம் தளர்ந்து போகாதீர்கள். வீழ்ச்சியிலிருந்து எவ்வாறு மீண்டெழலாம் என்று சிந்தியுங்கள். வீழ்ந்துவிட்டோம் என்று நினைத்து வாழ்க்கையை இழக்கும் அளவிற்கு செல்லாமல் முன்னோக்கிச் செல்வதற்கான வழியைத் தேர்ந்தெடுங்கள்.
  • யாரையும் நம்பி நீங்கள் இருக்காதீர்கள். நேர்மை ஒரு விலை மதிப்பற்றது. அது அனைவரிடமும் இருக்கும் என எதிர்பார்க்காதீர்கள். எந்தப் பணியினை ஆரம்பிப்பதாக இருந்தாலும் அதில் உங்களையே முழுமையாக நம்பி இருங்கள். பிறரை நம்பி செயற்படுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
  • நேரம் விலைமதிக்க முடியாத ஒரு சொத்து. நேரத்தின் மதிப்பினை பின்வருவோரிடம் கேட்டால் அவர்கள் மிகவும் தெளிவாக நேரத்தின் மதிப்பினை எடுத்துரைப்பார்கள்.
  • ஒரு மில்லி செக்கனின் மதிப்பினை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரிடம் வினவும் பொழுது அறிந்து கொள்ள முடியும்.
  • ஒரு செக்கனின் மதிப்பினை விபத்தில் உயிர் பிழைத்தவரை வினவும் பொழுது அறிந்து கொள்ள முடியும்.
  • ஒரு நிமிடத்தின் மதிப்பினை தூக்கிடப்பட்டு கொலை செய்யப்படும் குற்றவாளியினை வினவும் பொழுது அறிந்து கொள்ள முடியும்.
  • ஒரு மணி நேரத்தின் மதிப்பினை ஒரு உயிரைக் காப்பாற்ற போராடும் மருத்துவரை வினவும் பொழுது அறிந்து கொள்ள முடியும்.
  • ஒரு நாளின் மதிப்பினை அன்றைய தினம் வேலை இல்லாத தினக் கூலித் தொழிளாலரை வினவும் பொழுது அறிந்து கொள்ள முடியும்.
  • ஒரு வாரத்தின் மதிப்பினை வாரப் பத்திரிகை ஒன்றின் ஆசிரியரை வினவும் பொழுது அறிந்து கொள்ள முடியும்.
  • ஒரு மாதத்தின் மதிப்பினை குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாயை வினவும் பொழுது அறிந்து கொள்ள முடியும்.
  • ஒரு வருடத்தின் மதிப்பினை பரீட்சையில் தோல்வியுற்ற ஒரு மாணவனை வினவும் பொழுது அறிந்து கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.